ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 62ஆவது லீக் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே மற்றும் ஆயூஷ் மாத்ரே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய டெவான் கான்வே 10 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய உர்வில் படேல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து யுத்விர் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆயூஷ் மாத்ரே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை அதிரடியாக விளையாடுயதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

Advertisement

அதன்பின் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயூஷ் மாத்ரே 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் 13 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ஷிவம் தூபே இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த ஷிவம் தூபே - எம் எஸ் தோனி இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் எம் எஸ் தோனியும் 16 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் யுத்விர் சிங் மற்றும் ஆகாஷ் மத்வால் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 36 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். 

இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷியும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்த கையோடு ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் பராக்கும் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Advertisement

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் துருவ் ஜூரெல் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 31 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த ஐபிஎல் சீசனையும் வெற்றியுடன் முடித்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News