ஐபிஎல் 2025: விராட் கோலி, பில் சால்ட், படிதர் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது ஆர்சிபி!

Updated: Sat, Mar 22 2025 22:58 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியானது பலப்பரீட்சை நடத்தியது. 

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கர்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் சுனில் நரைனுடன் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

ஒருகட்டத்திற்கு மேல் சுனில் நரைனும் பவுண்டரிகளை விளாச, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே 25 பந்துகளில் தனது அரைசத்ததைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்திருந்த அஜிங்கியா ரஹானேவும் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 06 ரன்னிலும், ரிங்கு சிங் 12 ரன்னிலும், ஆன்ட்ரே ரஸல் 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷியும் 30 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி அணி தரப்பில் க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தங்களுடைய முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசி இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், தொடர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவருடைய பார்ட்னர்ஷிப்பும் 95 ரன்களை எட்டியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்த நிலையில் பில் சால்ட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 10 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதாரும் தனது பங்கிற்கு 16 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்த கையோடு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய லியாம் லிவிங்ஸ்டோன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 16.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை