ஐபிஎல் 2025: மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!

Updated: Sat, May 03 2025 23:44 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற  52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தின.

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றங்களும் இல்லாத நிலையில், ஆர்சிபி அணியில் ஹேசில்வுட்டிற்கு பதிலாக லுங்கி இங்கிடி லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஜேக்கப் பெத்தெல் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜேக்கப் பெத்தல் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 97 ரன்களை எட்டிய நிலையில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்திருந்த ஜேக்கப் பெத்தெல் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் அபாரமான அட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 29 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விரட் கோலி இப்போட்டியில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 17 ரன்களுக்கும், ஜித்தேஷ் சர்மா 7 ரன்களுக்கும், கேப்டன் ரஜத் படிதார் 11 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் - ரொமாரியோ ஷெஃபெர்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதிலும் கலீல் அஹ்மத் வீசிய இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை எதிர்கொண்ட ரொமாரியோ ஷெஃபெர்ட் 4 பவுண்டரிகளையும், 2 சிக்ஸர்களையும் விளாசி 33 ரன்களைச் சேர்த்து அணியை வலுவான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றார். 

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், நூர் அஹ்மத், சாம் காரண் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆயூஷ் மாத்ரே - ஷேக் ரஷீத் இணை தொட்க்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஷேக் ரஷீத் 14 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாம் கரணும் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஆயூஷ் மாத்ரே மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பூர்த்திசெய்து அசத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினர். இதில் சதத்தை நெருங்கிய ஆயூஷ் மாத்ரே 48 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 94 ரன்களைக் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டெவால்ட் பிரீவிஸும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் சிஎஸ்கே அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்க்ளில் 29 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் புவ்னேஷ்வர் குமார் வீசிய 19ஆவது ஓவரில் சிஎஸ்கே அணி 14 ரன்களைச் சேர்த்ததன் காரணமாக கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது 12 ரன்களை எடுத்திருந்த எம் எஸ் தோனி விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷிவம் தூபேவும் சிக்ஸர் விளாசிய நிலையிலும், அதன்பின் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் தடுமாறினர். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும், குர்னால் பண்டியா, யாஷ் தயாள் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியளிலும் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை