டெல்லி கேப்பிட்டல்ஸிலிருந்து விலகிய வாட்சன், அகர்கர்!
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மோசமான சீசனாக அமைந்துள்ளது எனவே கூற வேண்டும். அந்த அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிலும் அந்த அணியில் கேப்டன் டேவிட் வார்னர், அக்சர் படேல் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காததே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வீரர்களில் மிட்செல் மார்ஷ, ரிலீ ரூஸோவ், பிலீப் சால்ட் ஆகியோரும் தொடரின் கடைசி கட்டத்தில் மட்டுமே ஒருசில அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதுவும் அந்த அணியின் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்தன. இவை அனைத்தையும் தாண்டி அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் போனது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதுபோக பயிற்சியாளர்களின் முடிவுகளும் அவ்வபோது கடும் விமர்சனங்களை சந்தித்ததையும் நாம் தவிர்க்க முடியாது. இந்நிலையில் இப்படி சீசன் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தற்போது சில மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் மற்றும் இந்தியாவின் அஜித் அகர்கர் ஆகியோர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளனர். இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேசமயம் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும், அணியின் இயக்குநராக சவுரவ் கங்குலி ஆகியோரும் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.