ஐபிஎல் 2022: முதல் 10 வீரர்களும்; தேர்வு செய்த அணிகளும்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் மொத்தம் 600 வீரர்களும், 10 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இதில் மார்க்கீ வீரர்கள் எனப்படும் முதல் 10 வீரர்களுக்கான ஏலம் தற்போது முடிந்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் இடம்பெற்றார்.
ரூ.2 கோடி ஆரம்ப விலையைக் கொண்ட ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன்மூலம் மயங்க் அகர்வாலும் இணைந்து ஷிகர் தவான் தொடக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து இரண்டாவது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியாது.
மூன்றாவது வீராராக இடம்பெற்ற பாட் கம்மின்ஸை ரூ.7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் ஏலத்தில் வாங்கியது.
அடுத்ததாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா இடம்பெற்றார். இவரை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்த்தில் எடுத்தது. இவர் முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடினார்.
இந்த ஏலத்தின் 5ஆவது வீரராக நியூசிலாந்து வேகப்பந்துவிச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இடம்பெற்றார். கடும் போட்டிக்கு பிறகு இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
அதன்பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் அவர் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலத்தின் 7ஆவது வீரராக இடம்பிடித்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை ரூ.6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஃபாப் டூ பிளேசிஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.7 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. முன்னதாக இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரரான குயின்டன் டி காக்கை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
இந்த ஏலத்தில் 10ஆவது வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இடம்பெற்றார். அவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.6.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.