ஐபிஎல் 2022: அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்கள்!

Updated: Thu, Mar 10 2022 18:22 IST
Image Source: Google

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து மழை படைக்க தயாராகி வருகிறது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் என்னதான் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றாலும் அந்த அணி பெறும் வெற்றியில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அபாரமாக செயல்பட்டு அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.

1. ரோஹித் சர்மா

5 கோப்பைகளை வென்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான அணியாக மும்பை இந்தியன்ஸ் ஜொலிக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மா என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2008 முதல் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் என ஜாம்பவான்கள் கேப்டன்ஷிப் செய்த போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த அந்த அணிக்கு 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா அடுத்த 9 ஆண்டுகளில் 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

சொல்லப்போனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக பட்டையை கிளப்பிய காரணத்தாலேயே இன்று இந்திய அணியின் கேப்டனாகும் அளவுக்கு அவர் உயர்ந்துள்ளார். கேப்டன்ஷிப் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் மும்பை அணிக்காக காலம் காலமாக அபாரமாக செயல்பட்டு வரும் அவர், இதுவரை 213 போட்டிகளில் 5611 ரன்களை அடித்துள்ளார். மேலும் 18 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

2. எம்எஸ் தோனி

இந்தியாவின் மகத்தான கேப்டன் என்று போற்றப்படும் எம்எஸ் தோனி ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட 2008 முதல் இப்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன்ஷிப் செய்து 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனால் ஐபிஎல் போட்டிகளில் 2ஆவது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் பேட்டிங்கிலும் எத்தனையோ பந்துவீச்சாளர்களை பந்தாடியவர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சொல்லப்போனால் இந்த பட்டியலில் இருக்கும் இதர வீரர்கள் அனைத்தும் டாப் ஆர்டரில் களமிறங்கி ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவர்கள். ஆனால் எம்எஸ் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி சென்னை தடுமாறிய எத்தனையோ போட்டிகளில் தனி ஒருவனாக பேட்டிங் செய்து அபார பினிஷிங் கொடுத்து பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மொத்தமாக 17 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று கொடுத்துள்ள அவர் ஐபிஎல் போட்டிகளில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற 2ஆவது இந்திய வீரர் மற்றும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

3. யூசுப் பதான்

ஐபிஎல் தொடங்கிய காலகட்டங்களில் யூசுப் பதான் என்றாலே எதிரணி பந்துவீச்சாளர்கள் மிரண்டு போவார்கள். அந்த அளவுக்கு அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய அவர் 174 போட்டிகளில் 3204 ரன்களை விளாசியதுடன் 16 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இந்த பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

4. சுரேஷ் ரெய்னா 

ஐபிஎல் வரலாற்றில் பல அளப்பரிய சாதனைகளை படைத்து ரசிகர்கள் மற்றும் வல்லுனர்களால் “மிஸ்டர் ஐபிஎல்” என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இந்த வருடம் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் விலை போகாதது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

கடந்த 2019க்கு பின் ரன்கள் அடிக்க திணறி வந்த அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூட வாங்காதது பலரையும் சோகமடையச் செய்தது. இருப்பினும் 205 ஐபிஎல் போட்டிகளில் 5528 ரன்களை எடுத்துள்ள அவர் 14 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இந்த பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

5. விராட் கோலி & கவுதம் கம்பிர்

சச்சினுக்கு பின் இந்தியா கண்ட மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் ரன் மெஷின் விராட் கோலி 2008 முதல் இப்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த 2013 – 2021 வரை கேப்டனாகவும் செயல்பட்ட அவர் எத்தனையோ போட்டிகளில் தனி ஒருவனாக பேட்டிங் செய்து ரன்களை குவித்து முழுமூச்சுடன் போராடிய போதிலும் அந்த அணிக்காக கோப்பையை வாங்கி தர முடியவில்லை.

இதனால் சமீபத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய அவர் இதுநாள் வரை 207 போட்டிகளில் பங்கேற்று 6,283 ரன்களைக் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். இவர் 13 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார்.

இவருடன் கொல்கத்தா அணிக்காக 2 முறை கேப்டனாக சாம்பியன் பட்டங்களை வாங்கி கொடுத்த முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு 13 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை