அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளா ஆஃப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் - உஸ்மான் கானி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். இதில் குர்பாஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பாக விளையாடி வந்த கானி அரைசதம் கடந்தார்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய ஹஸ்மதுல்லா ஷாஹிதி, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் சொற்ப ரன்காளில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கானி 59 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஃப்ராஹிம் சத்ரான் 18 பந்துகளில் 29 ரன்களைச் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஜார்ஜ் டக்ரெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ஸ்டிர்லிங் 31 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த கையோடு பால்பிர்னி 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லோர்கன் டக்கரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து விக்கெட்டை இழந்தர். இறுதியில் லோர்கன் டக்கர் - ஜார்ஜ் டக்ரேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இதன்மூலம் அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.