ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்தவகையில் பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

Advertisement

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் இணை தொடக்க கொடுத்தனர். இதில் ரிஸ்வான் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு துணையாக சைம் அயூப்பும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் பாபர் அசாம் தனது அரைசதத்தைக் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த பாபர் ஆசாமும் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அசாம் கான், ஷதாப் கான் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 20 ரன்களை எடுத்திருந்த ஃபகர் ஸமானும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய இஃப்திகார் அஹ்மாத் - ஷாஹீன் அஃப்ரிடி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஃப்திகார் அஹ்மத் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களையும், ஷாஹீன் அஃப்ரிடி 2 சிக்ஸர்களுடன் 14 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்துள்ளது. அயர்லாந்து அணி தரப்பில் கிரேய்க் யங் 2 விக்கெட்டுகளையும், கரெத் டெலானி மற்றும் மார்க் அதிர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News