IRE vs SA : பவுமா, ஹென்ரிக்ஸ் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பவுமா - ரீசா ஹென்ரிக்ஸ் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின்னர் 69 ரன்களில் ஹென்ரிக்ஸ் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்து டெம்பா பவுமாவும் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் - ஹென்ரிச் கிளாசன் இணை தங்கள் பங்கிற்கு பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தியது.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்களைக் குவித்தது. அயர்லாந்து அணி தரப்பில் பேரி மெக்கர்த்தி, சிமி சிங் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.