அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. அந்தவகையில் ஜூலை 25ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸை வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்களையும், ஜெய்லார்ட் கும்பி 49 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பேரி மெக்கர்தி மற்றும் ஆண்டி மெக்பிரையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் அதிர் 2 விக்கெட்டுகளையும், கிரெய்க் யங், கர்டிஸ் காம்பேர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணிக்கு பீட்டர் மூர் 79 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் அயர்லாந்து அணி இரண்டாம் நாள் அட்டநேர முடிவுக்கு முன்னேரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸிங் முசரபானி, தனகா ஷிவாங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டெண்டாய் சடாரா, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 40 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி - பிரின்ஸ் மஸவாரே ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜெய்லார்ட் கும்பி 7 ரன்களையும், பிரின்ஸ் மஸவாரே 4 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கும்பி 24 ரன்களுக்கும், மஸவாரே 12 ரன்களுக்கும், கேப்டன் கிரேய்க் எர்வின் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் இனைந்த தியான் மேயர்ஸ் - சீன் வில்லியம்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தியான் மேயர்ஸ் அரைசதம் கடந்த அசத்தினார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சீன் வில்லியம்ஸும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய பிரையன் பென்னெட், கிளைவ் மடாண்டே ஆகியோர் தலா 10 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தியான் மேயர்ஸும் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ஜிம்பாப்வே அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 197 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஆண்டி மெக்பிரையன் 4 விக்கெட்டுகளையும், மார்க் அதிர், கிரேக் யங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான பீட்டர் மூர், கர்டிஸ் காம்பேர், ஹேரி டெக்டர் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி ரிச்சர்ட் ங்கரவா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து நட்சத்திர வீரர்களான கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 4 ரன்களுக்கும், பால் ஸ்டிர்லிங் 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அயர்லாந்து அணியானது 21 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த லோர்கன் டக்கர் - ஆண்டி மெக்பிரையன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதன்பின் மழை குறுக்கிட்டதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டமானது முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை எடுத்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியில் லோர்கன் டக்கர் 9 ரன்களுடனும், ஆண்டி மெக்பிரைன் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளன. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரவா 4 விக்கெட்டுகளையும், பிளெஸிங் முசரபானி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.