டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!

Updated: Mon, Jun 03 2024 20:58 IST
Image Source: Google

 

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜூன் 05ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதியுள்ள போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அயர்லாந்து அணியும் சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருவதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். 

அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியை இர்பான் பதான் தேர்வு செய்யும் காணொளியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பகிர்ந்துள்ளது. அதில் அவர், இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தொடக்கம் மிகவும் முக்கியமானது என்று நம்புகிறேன், ஆனால் பயிற்சி ஆட்டத்தைப் பார்த்த பிறகு அது நடக்காது என்பது தெரிந்துள்ளது. அதனால் நிச்சயம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரே தொடக்கம் கொடுப்பார்கள் என்று தெரிகிறது. 

இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்தவரையில் ரிஷப் பந்த் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என தோன்றுகிறது. இந்த யோசனை எனக்கு பிடித்திருக்கிறது. ஏனென்றால் நீங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனைப் பெறுவீர்கள், மேலும் அவர் பவர்பிளேயில் பேட்டிங் செய்தால், யாராலும் அவரை ஆஃப் சைடில் சிக்க வைக்க முடியாது. இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்திலும், ஷிவம் துபே ஐந்தாவது இடத்திலும், ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்திலும் களமிறங்குவார்கள்.

சுழற்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவை ஆகியோரை தேர்வு செய்வேன். மேற்கொண்டு வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜை நான் தேர்வு செய்வேன். மேலும் இங்கு அமெரிக்காவில் விளையாடும் போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும், வெஸ்ட் இண்டீஸில் விளையாடும் போது இரண்டு வேகப்பந்து வீச்சாளரையும் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார். 

இர்ஃபான் பதான் தேர்வு செய்த பிளேயிங் லெவன்: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை