இந்திய அணியின் மேட்ச் வின்னர் அஸ்வின் - ரோஹித் சர்மா புகழாரம்!

Updated: Wed, Mar 06 2024 20:42 IST
இந்திய அணியின் மேட்ச் வின்னர் அஸ்வின் - ரோஹித் சர்மா புகழாரம்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனால் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதேசமயம் கடந்த இரண்டு போட்டிகளாக பேட்டிங் சோபிக்க தவறிய இளம் வீரர் ராஜ்த் பட்டிதாருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கேப்டன் ரோஹித் சர்மா, அஸ்வின் குறித்தும், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடுவது என்பது ஒரு வீரரின் மிகப்பெரும் கனவு. இந்திய அணியின் முக்கியமான மேட்ச் வின்னர்களில் அஸ்வினும் ஒருவர். அவரின் பங்களிப்பிற்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது. கடந்த 5 முதல் 7 ஆண்டுகளில் அஸ்வினின் வளர்ச்சி அபாரமானது. ஒவ்வொரு தொடரிலும் அஸ்வின் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கியுள்ளார். அவரை போன்ற வீரர்கள் கிடைப்பது எளிதல்ல.

மேலும், ரஜத் பட்டிதர் நிச்சயம் மிகச்சிறந்த வீரர். அவரிடம் நல்ல திறமை உள்ளது. அவரின் அணுகுமுறையும் ஆட்டமும் என்னை கவர்ந்துள்ளது. அதனால் திறமையான வீரராக பார்க்கிறேன். அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு ஏராளமான கம்பேக் போட்டியாகவே அமைந்துள்ளது. 

எப்போதெல்லாம் இந்திய அணி மீது அழுத்தம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த அழுத்தத்தை எதிரணி மீது எங்களால் திருப்ப முடிகிறது. இந்தத் தொடருக்கு நான் கேப்டனாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு கேப்டனாக நான் எந்த இடத்தில் இல்லை என்பதையும், வித்தியாசமாக நான் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதையும் இது எனக்குப் புரிய வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை