விமர்சித்தவர்கள் தற்போது பாராட்டினாலும் அந்த வலி இன்னும் போகவில்லை - கேஎல் ராகுல்!

Updated: Mon, Oct 09 2023 20:54 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித், இஷான், ஸ்ரேயாஸ் ஆகிய 3 வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 2-3 என்ற மோசமான துவக்கத்தை பெற்றதால் தோல்வி உறுதியென ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி 165 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்திய விராட் கோலி 85 ரன்களும், கேஎல் ராகுல் 97 ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அதில் கேட்ச் அதிர்ஷ்டத்தால் அசத்திய விராட் கோலியை விட கொஞ்சம் கூட தடுமாறாமல் சிறப்பாக பேட்டிங் செய்த ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கர்நாடகவை சேர்ந்த ராகுல் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய போதிலும் 2019க்குப்பின் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தினார். ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சுமாராக செயல்பட்ட அவர் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமானதால் சுயநலமானவர் என்பது உட்பட ஏராளமான கிண்டல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளனர்.

அதற்கிடையே 2023 தொடரில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் தற்போது குணமடைந்து ஃபார்முக்கு திரும்பி இந்தியாவின் வெற்றி நாயகனாக மீண்டும் வந்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் கிண்டலடித்து விமர்சித்தவர்கள் தற்போது பாராட்டினாலும் அந்த வலி இன்னும் போகவில்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் விமர்சனங்களை 2023 உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்ற உத்வேகமாக மாற்றிக் கொண்டதாகவிவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய, “ஒரு சமயத்தில் ஏராளமான விமர்சனங்கள் இருந்தது. ரசிகர்கள் என்னை ஒவ்வொரு போட்டியிலும் விமர்சித்ததற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் என்னுடைய செயல்பாடுகள் அவ்வளவு மோசமாக இல்லை. அதனால் மிகவும் வேதனையாக இருந்தது. மேலும் ஏற்கனவே சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து வந்த போது ஐபிஎல் தொடரில் மீண்டும் காயத்தை சந்தித்ததால் 4 – 5 மாதங்கள் விளையாட முடியாது என்பதை அறிந்தேன்.

நிறைய காயங்களையும் சிகிச்சைகளையும் பார்த்த எனக்கு அதன் வலி தெரியும். எனவே அந்த வலியையும் விமர்சனங்களையும் நான் நேர்மறையாக மாற்றி உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்ல வேண்டும் என்ற உத்வேகமாக எடுத்துக் கொண்டேன். அதனால் காயத்திலிருந்து குணமடையும் போது ஒவ்வொரு நாள் காலையும் உலகக் கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை நினைத்தேன். ஏனெனில் உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை