உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அசத்திய நிலையில், 56 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய துனித் வெல்லாலகே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடினாலும், மறுமுனையில் வநிந்து ஹசரங்கா, ஜனித் லியானகே, அகிலா தனஞ்செய ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த துனித் வெல்லாலகே அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தடுமாறி வந்த ஷுப்மன் கில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதத்தைப் பதிவுசெய்த ரோஹித் சர்மாவும் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களுக்கும், விராட் கோலி 24 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த கேஎல் ராகுல் - அக்ஸர் படேல் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அணியை கரைசேர்த்தனர். அதன்பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 33 ரன்களில் அக்ஸர் படேலும் ஆட்டமிழக்க, இறுதியில் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷிவம் தூபேவும் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரனக்ளுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இப்போட்டியானது முடிவு எட்டப்படாமல் டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த ஸ்கோரானது எட்டக்கூடிய ஒன்றாகதான் இருந்தது. ஆனால் இதுபோன்ற மைதானங்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவது அவசியம். இன்னிங்ஸின் தொடக்கத்தில் நாங்கள் நன்றாக பேட் செய்தோம். அச்சமயத்தில் எங்கள் அணியின் வெற்றியும் எளிதாக கிடைக்கும் என்று எண்ணினோம். ஆனால் அதன் பின் நாங்கள் சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் பின்னடைவை சந்தித்தோம். அதேசமயம் கேஎல் ராகுலும் அக்ஸர் படேலும் இணைந்து எங்களை சரிவிலிருந்து மீட்டனர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஆனால் இறுதியில் நாங்கள் நினைத்தது போல் ஏதும் நடக்கவில்லை என்பது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. இலங்கை அணி இப்போட்டியில் சிறப்பாக விளையாடியது. இறுதியில், இது ஒரு நியாயமான முடிவாகவே தோன்றுகிறது. ஏனெனில் பிட்ச் முதல் இன்னிங்ஸில் எப்படி செயல்பட்டதோ அதேபோல் தான் இரண்டாவது இன்னிங்ஸிலும் இருந்தது. நீங்கள் வந்து உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல. ஆட்டம் வெவ்வேறு நேரங்களில் இரு அணிகளையும் நோக்கி மாறியது. ஆனால் இறுதியில் நாம் அந்த ஒரு ரன்னை எடுத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.