சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜேக்கப் பெத்தெல்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தெல் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். மேற்கொண்டு எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
முன்னதாக இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த ஜேக்கப் பெத்தெல் பேட்டிங்கில் 51 ரன்களையும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ஆனால் அப்போட்டியின் போது காயமடைந்த அவர் 3 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் மேற்கொண்டு பந்துவீசவில்லை. அதன்பின் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அவர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவருக்கு பதிலாக டாம் பான்டன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் தற்சமயம் பெத்தெலின் காயம் தீவிரமடைந்ததை அடுத்து, எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் டாம் பான்டன் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி இங்கிலாந்து அணி தங்களது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதன்பின் பிப்ரவரி 26ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகவும், மார்ச் 1ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து ஒருநாள் அணி:பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், டாம் பான்டன், பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வுட், ஜேமி ஓவர்டன், சாகிப் மஹ்மூத், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர்.