பாஸ்பாலுக்கு எதிரான எங்கள் அணுகுமுறை மாறாது - ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனில் உள்ளனர். இதனால் மூன்றாவது டெஸ்ட்டில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக பென் ஸ்டோக்ஸ் - பிராண்டன் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை வழக்கத்திற்கு மாறாக டி20யை போல் அதிரடியாக விளையாடும் பாஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி பல வெற்றிகளை குவித்தது. இதனால் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்தி இந்தியாவில் எடுபடுமா என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல் டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
ஆனால் அதன்பின் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பாஸ்பல் யுக்தி இந்திய அணிக்கெதிராக எடுபடவில்லை. இதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் எங்களது ஆட்ட அணுகுமுறையை நாங்கள் மாற்றப்போவதில்லை என்று அந்த அணியின் பயிற்சியாளர், கேப்டன் உள்பட அணி வீரர்களும் உறுதியுடன் உள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் பாஸ்பால் யுக்திக்கு எதிரான எங்களது அணுகுமுறை மாறாது என்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தோற்கடிப்பது கடினம் அல்ல, ஆனால் அவர்கள் வித்தியாசமான பாணியில் விளையாடுகிறார்கள், அதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகும். ஆனால் அவர்களின் பாணியையும் அணுகுமுறையையும் நீங்கள் புரிந்து கொண்டால், அதற்கேற்ப நீங்கள் விளையாட்டைத் திட்டமிடலாம்.
பாஸ்பாலுக்கு எதிராக நாங்களும் சில எளிமையான திட்டங்களை வைத்திருக்கிறோம். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதிப்போம், எங்களிடம் எங்கள் விளையாட்டுத் திட்டம் உள்ளது, நாங்கள் அதைக் கடைப்பிடித்தால் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன. எதிரணி நன்றாக இருப்பதால் நாமும் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். கடந்த போட்டியில் விளையாடியது போல் ஒரு அணியாக விளையாட முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இத்தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியின் போது காயமடைந்த ரவீந்திர ஜடேஜா, அதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். அதன்பின் தேசிய கிரிக்கெட் அகாடமில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், தற்போது முழு உடற்தகுதியை எட்டி மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதனால் நாளை போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.