காயத்திலிருந்து மீண்டு பயிற்சி போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா!

Updated: Sun, Jul 30 2023 22:43 IST
காயத்திலிருந்து மீண்டு பயிற்சி போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா! (Image Source: Google)

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, இலங்கைக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்தார். இதையடுத்து நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா அடுத்து ஆசிய கோப்பை மற்றும் முக்கியமான தொடரான ஒரு நாள் கிரிக்கெட் உலக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு செல்கிறது. அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணை வெளியானது. ஆனால், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. இந்த அயர்லாந்து தொடர் மூலமாக ஜஸ்ப்ரித் பும்ரா அணிக்கு திரும்புவார் என்று சொல்லப்பட்டது. அதனை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் அண்மையில் உறுதி செய்தார்.

இந்த நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆரம்பத்தில் குறைவான ஓவர்கள் பந்து வீசி வந்த ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது மும்பை பேட்ஸ்மேனான அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு எதிராக பந்து வீசி அவரது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். கடந்த 2 வாரங்களாக பெங்களூருக்கு அருகில் உள்ள ஆலூரில் உள்ள கேஎஸ்சிஏ வளாகத்தில் மும்பை சீனியர் அணி தங்கியுள்ளது. அவர்களுடன் நடந்த போட்டியில் பும்ரா 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.

இதே போன்று பிரசித் கிருஷ்ணாவும் 10 ஓவர்கள் பந்து வீசி 2 மெய்டன் உள்பட ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். கடந்த 21 ஆம் தேதி அன்று மருத்துவ அறிக்கையில் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பயிற்சி விளையாட்டு போட்டிகளில் விளையாடுவார்கள். அந்த போட்டிகளை தேசிய கிரிக்கெட் அகாடமியே ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருந்தது. அதன்படி நேற்று பயிற்சி போட்டி நடந்தது. இதன் மூலமாக தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து புறப்படும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் பும்ரா இடம் பெற்றால் அவர் 2ஆவது முறையாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார். இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு பும்ரா அயர்லாந்து சென்றிருந்தார். அங்கு முதல் டி20 போட்டியின் போது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2ஆவது டி20 போட்டியில் அவர் விளையாட வில்லை. இதன் காரணமாக ஜூலை மாதம் தொடங்கிய இங்கிலாந்து தொடரில் அவர் இடம் பெறாத சூழல் ஏற்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை