கபில் தேவ் சாதனையை முறியடித்தார் ஜஸ்பிரித் பும்ரா!

Updated: Wed, Dec 18 2024 09:07 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது.

இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அரைசதங்கள் காரணமாக 260 ரன்களைச் செர்த்து ஆல் அவுட்டானது. இதில் கேஎல் ராகுல் 84 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 77 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் 185 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் உஸ்மன் கவாஜா 4 ரன்னிலும், மார்னஸ் லபுஷாக்னே ஒரு ரன்னிலும் என ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அவர்களைத் தொடர்ந்து நாதன் மெக்ஸ்வீனி 8 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 2 ரன்னிலும் என ஆகஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 28 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் எனும் சாதனையை பும்ரா படைத்துள்ளார். முன்னதாக இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆஸ்திரேலியாவில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் தற்போது ஜஸ்பிரித் பும்ரா 10 டெஸ்ட் போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக ஆசியாவிற்கு வெளியே இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளராக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் கபில் தேவின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை