டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாம் கொன்ஸ்டாஸ் இந்த இன்னிங்ஸில் 8 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரன உஸ்மான் கவாஜாவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார் .
பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டேவ் ஸ்மித் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக (பந்துகள் அடிப்படையில்) 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். மேற்கொண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 12ஆவது வீரர் எனும் பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார்.
அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் (பந்து பந்துகள்)
- வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) - 7725 பந்துகள்
- டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா) - 7848 பந்துகள்
- ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா) - 8153 பந்துகள்
- ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 8484 பந்துகள்
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் ஒரு பதிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையும் பும்ரா தன் பெயரில் எழுதியுள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் 84 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா 12 ஐந்து விக்கெட் ஹாலுடன் 202 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.