இணையத்தில் வைரலாகும் ஜஸ்ப்ரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்துமுடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளை நேற்று வெளியிட்டது. அதில் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். முன்னதாக சக வீரர் அஸ்வின் முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை பின்னுக்குத்தள்ளி பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக 1979ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனைத் தற்போது பும்ரா முறியடித்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது குறித்து பும்ரா பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, "நமக்கு ஆதரவு கொடுக்க ஒருவரைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் நாம் ஏதேனும் சாதனை செய்தால் வாழ்த்து சொல்ல மட்டும் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள்” என்பது போல் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, ஆதரவு vs வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.