வெளியான பும்ராவின் பயிற்சி குறித்த அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Wed, Jun 28 2023 12:01 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களை விடவும், அதிகமான வீரர்கள் என்சிஏ-வில் முகாமிட்டுள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் உள்ளிட்டோர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா, கிட்டத்தட்ட ஓராண்டாக ஓய்வில் இருக்கிறார். இவர் இல்லாமல் இந்திய அணி விளையாடிய டி20 உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்றால் கட்டாயம் பும்ரா இந்திய அணிக்காக களிறங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பும்ரா விளையாடி இருந்தார். அதன்பின்னர் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ராவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் குணமடைந்த பும்ரா, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பும்ராவின் பயிற்சி குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது. அதில், என்சிஏவில் ஒரு நாளில் மட்டும் பும்ரா 7 ஓவர்களை வீசி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜூலை மாதம் முதல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடக்கவுள்ள பயிற்சி போட்டிகளில் பும்ரா களமிறங்க உள்ளதாக தெரிகிறது. அதன்பின்னரே பும்ராவின் உடல்தகுதி குறித்து முழுமையாக தெரிய வரும்.

சர்வதேச கிரிக்கெட்டை விளையாடுவதற்கான முழு உடல்தகுதியை எட்டினால் மட்டுமே பும்ரா, இந்திய அணிக்காக களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்கள் வரிசைக் கட்டி நிற்கும் நிலையில், மீண்டும் பும்ரா காயமடைந்தால் இந்திய அணிக்கு நல்லதல்ல. அதனால் பும்ரா விவகாரத்தில் பிசிசிஐ நிதானமாகவே முடிவு எடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை