CT2025: பும்ரா குறித்து வெளியான தகவல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு தொடர்ந்து அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.
அந்தவகையில் சமீபத்தில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் கடைசி போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து தனது காயத்திற்காக சிகிச்சை பெற்றுவரும் அவர், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, காயம் காரணமாக ஓய்வில் உள்ள பும்ரா எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளை தவறவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், ஜஸ்பிரித் பும்ராவின் முதுகில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றும், ஆனால் அங்கு வீக்கம் இருப்பதாகவும், அதிலிருந்து மீள குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் அவரால் விளையாட இயலாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் மூன்று வார காலங்களுக்குள் அவரின் காயம் குணமடையும் என்பதும் உறுதியாக தெரிவில்லை என்பதால், இத்தொடரில் இருந்து முழுமையாக விலகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி, பிப்ரவரி 20ஆம் தேதி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தையும், அதன் பிறகு பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்ளும். இதன் பிறகு, குழு நிலையில் அவர்களின் கடைசி போட்டி மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது. இதில் ஏதெனும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.