மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு?

Updated: Mon, Feb 05 2024 21:59 IST
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு? (Image Source: Google)

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. 

ஏற்கெனவே இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிபார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வின்றி விளையாடிவருவதால் அவரது பணிச்சுமையை குறைப்பதற்காக இப்போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள பும்ரா இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் இரண்டாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். 

ஏற்கெனவே இந்திய வீரர் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிப்பது சந்தேகமாக உள்ள நிலையில், தற்போது ஜஸ்ப்ரித் பும்ராவுக்கும் இப்போட்டியில் ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை