மீண்டும் பந்துவீச தொடங்கிய பும்ரா; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் காயம் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிய பும்ரா, அத்தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்தார். இதனால் அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் பந்துவீவும் இல்லை. இதனையடுத்து அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இதனால் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்திருந்தார். இருப்பினும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததன் காரணமாக அவர் அத்தொடர்களில் இருந்தும் விலகினார். இதனையடுத்து அவருக்கு மாற்றாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.
இருப்பினும் ஜஸ்பிரித் பும்ராவின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய சில வாரங்கள் தேவைப்படும் என்பதால் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல்களும் வெளியானது. இதனால் இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜஸ்பிரித் பும்ரா நேற்றைய தினம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அதன்படி ஜஸ்பிரித் பும்ரா வலை பயிற்சியில் பந்துவீசும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் கூடிய விரையில் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்குவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்றார். அதன்படி 2024ஆம் ஆண்டில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 14.92 என்ற சராசரியில் 71 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதுதவிர்த்து 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் மற்றும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.