பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்!

Updated: Sun, Oct 27 2024 20:24 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

அதிலும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் தொடரையும் 2-0 என இழந்தது. இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 01ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஏனெனில் நடப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித்  பும்ராவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 3.09 என்ற எகானமியில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். 

மேற்கொண்டு எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் முக்கிய வீரராக ஜஸ்பிரித் பும்ரா இருப்பதால், அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. அதனை முன்னிலைப் படுத்தும் விதமாகவே தற்சமயம் தினேஷ் கார்த்திக்கும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வினை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஜஸ்பிரித் பும்ராவுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை. ஒருவேளை அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்படும் பட்சத்தில், அந்த இடத்தில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள். இதுதவிர வேறு எந்த மாற்றத்தையும் என்னால் நினைக்க முடியாது. அதேசமயம் இந்த ஆட்டத்தில் விளையாடிய பேட்டர்களுக்கோ, பந்து வீச்சாளர்களுக்கோ வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் எதுவும் தெரியவில்லை” என்று கூறியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, துருவ் ஜூரல், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை