வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரியா புனியா 7 ரன்களுக்கும், யஸ்திகா பாட்டியா 15 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும் 35 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 52 ரன்களில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸும் 86 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களைச் சேர்த்துள்ளது.