நீங்களும் தங்கப் பதக்கத்தை வென்று வாருங்கள் - ஆடவர் அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் வேண்டுகோள்!

Updated: Mon, Sep 25 2023 22:02 IST
Image Source: Google

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 116 ரன்கள் மட்டுமே  எடுத்தது. 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவினர். இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறது இந்திய மகளிர் அணி.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளில் ஒருவரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆடவர் அணி தங்கம் வெல்வதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் ஆடவர் கிரிக்கெட் அணியினருடன் பேசினோம். நாங்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளோம். நீங்களும் தங்கப் பதக்கத்தை வென்று வாருங்கள் என்றோம். ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட்டில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பெருமை மிக்க தருணம். 

இந்தியாவின் பதக்கப் பட்டியலில் பதக்கத்தை சேர்ப்பது பெருமை கொள்ளச் செய்கிறது. இது ஒரு வித்தியாசமான அனுபவம். இந்திய அணியின் ஜெர்சியை அணிவது மிகுந்த பெருமையளிக்கிறது. இலங்கை அணி வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை