அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த நீஷம்- வைரல் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று கெபெர்ஹாவில் நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் அந்த அணி 53 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் ஈதன் போஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரைலீ ரூஸோவ் ரன்கள் ஏதுமின்றியும், கைல் வெர்ரைன் 11 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அக்கர்மேன் 25 ரன்களையும், கீகன் லயன் கேஷெட் 28 ரன்களையும் சேர்த்தையும் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர். இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 16.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 97 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி சன்ரைசர்ஸ் அணியின் லியாம் டௌசன் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்க்கு முயற்சியில் இறங்கினார். அவர் இப்போட்டியில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசிய 25 ரன்களைச் சேர்த்திருந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அப்போது இன்னிங்ஸின் கடைசி ஓவரை நாதன் போஷ் வீசிய நிலையில் அதனை எதிர்கொண்ட டௌசன் மிட் ஆஃப் திசையை நோக்கி பவுண்டரி அடிக்கு முயற்சியில் தூக்கி அடித்தார் ஆனால் பந்தில் அவர் எதிர்பார்த்த அளவில் வேக இல்லாததால் 30யார்ட் வட்டத்திற்குளேயே பந்து விழுந்தது. அப்போது அத்திசையில் ஃபீல்டிங்க் செய்து கொண்டிருந்த ஜிம்மி நீஷம் அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் நீஷம் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.