டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; 6ஆம் இடத்திற்கு முன்னேறினார் ஜோ ரூட்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத், அகா சல்மான் மற்றும் அப்துல்லா ஷஃபிக் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
பின்னார் நேற்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஸாக் கிரௌலி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனாலும் இப்போட்டியில் அபாரமாக விளையடி வந்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 35ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடி வந்த ஹாரி புரூக்கும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 492 ரன்களைக் குவித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஜோ ரூட, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா, பாகிஸ்தானின் யூனிஸ் கான், இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி தற்போது 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களை விளாசி முதலிடத்தில் தொடர்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள்
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 51 சதங்கள்
- ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 45 சதங்கள்
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 41 சதங்கள்
- குமார் சங்கக்காரா (இலங்கை) - 38 சதங்கள்
- ராகுல் டிராவிட் (இந்தியா) - 36 சதங்கள்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 35 சதங்கள்
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலிலும் ஜோ ரூட் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ள நிலையில், அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மற்றும் இந்தியாவின் ராகுல் டிராவிட் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.