இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!

Updated: Fri, Feb 28 2025 20:12 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. 

அதேசமயம் இத்தொடரில் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றுடன் இத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி சமீப காலங்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதால் அவர் மீதும் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என அடுத்தடுத்து ஐசிசி தொடர்களில் படு தோல்விகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் தொடர் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இது எனக்கு மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கும் சரியான முடிவு. மேலும் வேறு யாராவது அணியின் கேப்டனாக செயல்பட்டு பிரெண்டன் மெக்கல்லமுடன் இணைந்து அணியை மீண்டும் தேவையான இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன். மேலும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எனது கேப்டன்சிக்கு முடிவுகள் அடிப்படையில் முக்கியமானதாக இருக்கும் என்பது எனக்கு தெளிவாகத் தெரிந்தது.

பிரெண்டன் சமீபத்தில்தான் அணியில் இணைந்ததால், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், மிக விரைவான திருப்பம் ஏற்பட்டு அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வேன் என்று நம்பினேன், ஆனால் அது நான் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. எனக்கும் அணிக்கும் ஒரு மாற்றம் ஏற்பட இதுவே சரியான நேரம் என்று தோன்றுகிறது. மேலும் எனது நாட்டை வழிநடத்தியது எனக்கு கிடைத்த ஒரு மகத்தான மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து அணி நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தங்களுடைய கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவார். இதனால் இப்போட்டியில் அவருடைய செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை