என்னுடைய திட்டத்திற்கு ஏற்ப சில கோணங்களில் பந்து வீசி வருகிறேன் - முகமது நபி!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ நகரில் நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.3 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக எங்கல்பேர்ச்ட் 58, மேக்ஸ் ஓ’டவுட் 42 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 நூர் அகமது 2 விக்கெட்கள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 180 ரன்கள் துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு கேப்டன் ஷாகிதி 56*, ரஹமத் ஷா 52 ரன்கள் எடுத்து 31.3 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது நபி ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் முகமது நபி, “நான் என்னுடைய பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். சரியான லைன் மற்றும் லென்ந்தில் வீசினால் நன்றாக இருக்கும் என்பதனால் அதில் நிறையவே பயிற்சி எடுத்து பந்து வீசி வருகிறேன். அதேபோன்று ஒருநாள் போட்டிகளில் அதிகளவு டாட் பால்களை வீச வேண்டும் என்ற திட்டம் எப்பொழுதுமே என்னிடம் இருக்கும்.
ஏனெனில் நான் நிறைய டாட் பால்களை வீசும் போது அது விக்கெட் விழுவதற்கு வாய்ப்பாகவும் அமையும். அதேபோன்று நான் என்னுடைய லைன் மற்றும் லென்ந்தில் என்னுடைய திட்டத்திற்கு ஏற்ப சில கோணங்களில் பந்து வீசி வருகிறேன். அப்படி நான் வீசும் பந்துகள் சரியான இடத்தில் பிட்ச் ஆவதால் எனக்கு விக்கெட்டுகள் கிடைக்கின்றன. எப்போதுமே எனக்கு எதிராக விளையாடும் வீரர்களை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புகிறேன்.
அதன் காரணமாகவே என்னால் அதிக டாட் பால்களை வீச முடிகிறது. அதோடு குறைவான ரன்களையும் வழங்க முடிகிறது. இந்த 38 வயதிலும் நான் நல்ல உடற்தகுதியுடன் இருக்க என்னுடைய டயட் மற்றும் பயிற்சிகள் தான் காரணம். தற்போதும் என்னுடைய உடற்தகுதி சிறப்பாக இருப்பதாகவே உணர்கிறேன். ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.