வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கும் கேன் வில்லியம்சன்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் நியூசிலாந்து அணி தங்கள் விளையாடிய முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி முதல் போட்டியில் வெற்றியையும், இரண்டாவது போட்டியில் தோல்வியையும் பெற்றுள்ளது. இதனால் நாளைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதல் 2 ஆட்டங்களில் விளையாடவில்லை. அதனால் டாம் லேதம் நியூசிலாந்து அணியை வழிநடத்தினார்.
இந்நிலையில் நாளை சென்னையில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்சன் களம் இறங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் மற்றொரு அனுபவ வீரரான டிம் சௌதீ காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் அவர் நாளை விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.