ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து கபில் தேவ் கருத்து!

Updated: Sat, Jan 07 2023 19:43 IST
Kapil Dev makes big statement on Rohit Sharma's fitness! (Image Source: Google)

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த் 2021 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இந்தியாவின் அனைத்து விதமான அணிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். 

ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி மொத்தமாக 68 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 5 டெஸ்ட், 21 ஒருநாள் போட்டி மற்றும் 42 டி20 போட்டிகள் அடங்கும். இந்த 68 போட்டிகளில் ரோஹித் சர்மா மொத்தமே 39 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். இதில் இரண்டு டெஸ்ட் ,8 ஒரு நாள் மற்றும் 29 டி20 போட்டிகள் அடங்கும்.

டி20 உலக கோப்பை நடைபெற இருந்ததால் சுழற்சி முறையில் வீரர்களை பிசிசிஐ கடந்த ஆண்டு பயன்படுத்தியது. இது ஒரு காரணமாக இருந்தாலும், ரோஹித் சர்மா முக்கிய தொடர்களுக்கு முன்பு காயம் காரணமாக வெளியேறியது மற்ற ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கபில் தேவ்,”ரோஹித் சர்மாவை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது. ஒரு கிரிக்கெட் வீரருக்கு தேவையான அனைத்தும் அவரிடம் இருக்கிறது. இது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் அவருடைய உடல் தகுதியை குறித்து எப்போது பேசினாலும் பெரிய கேள்விக்குறி இருக்கும். 

ஒரு கிரிக்கெட் வீரருக்கு தேவையான உடல் தகுதி அவரிடம் இருக்கிறதா? ஏனென்றால் ஒரு கேப்டனுடைய உடல் தகுதி மற்ற வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்க கூடிய வகையில் இருக்க வேண்டும். கேப்டனை போல் நாமும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என சக அணி வீரர்கள் நினைக்க வேண்டும்.

சக வீரர்கள் தங்களுடைய கேப்டனை பெருமையாக கருத வேண்டும். ஆனால் ரோஹித் சர்மா விஷயத்தில் அப்படி இல்லை. ரோஹித் சர்மா கேப்டன் ஆன பிறகு அதிகமாக ரன்கள் அடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவருடைய கிரிக்கெட் திறமையில் எந்த குறையும் இல்லை. அவர் இந்திய அணியின் வெற்றிகரமான வீரராக திகழ்ந்து வருகிறார்.

ஆனால் அவர் மட்டும் தன்னுடைய உடல் தகுதியில் கவனம் செலுத்தினால் ஒட்டுமொத்த அணியும் அவரை பின்பற்றும். இளம் வீரர்களுக்கும் நான் ஒரு அறிவுரையை வழங்க விரும்புகிறேன். எப்போதும் ரோகித் விராட் கோலி அணியை காப்பாற்றுவார்கள் என்று நினைக்காதீர்கள். உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய தகுதியை வளர்த்துக் கொண்டு அவர்களிடத்தை நிரப்ப நீங்கள் ஆர்வம் காட்டுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை