IReW vs ENGW, 1st ODI: ஆல் ரவுண்டராக அசத்திய கேட் கிராஸ்; இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி!

Updated: Sat, Sep 07 2024 22:11 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இங்கிலாந்து மகளிர் அணியானது தற்மயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் உனா ரெய்மண்ட் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் கேபி லூயிஸ் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ஏமி ஹண்டர் - ஓர்லா பிரெண்டர்காஸ்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஏமி ஹண்டர் 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய பிரெண்டர்காஸ்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக லியா பாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் 76 ரன்கள் சேர்த்த நிலையில் பிரெண்டர்காஸ்டும், 33 ரன்கள் எடுத்த நிலையில் லியா பாலும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீராங்கனைகளில் அலிஸ் டெக்டர் 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து மகளிர் அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் கேட் கிராஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணியிலும் தொடக்க வீராங்கனைகள் எமா லாம்ப் 4 ரன்களிலும், டாமி பியூமண்ட் 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஹோலி ஆர்மிடேஜ் - பைஜ் ஸ்கோல்ஃபீல்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹோலி ஆர்மிடெஜ் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து பைஜ் ஸ்கோல்ஃபீல்ட் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஃபிரேயா கெம்ப் 26 ரன்களுடனும், மேடி வில்லியர்ஸ் 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த பெஸ் ஹெத் - கேப்டன் கேட் கிராஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், வெற்றிக்கும் அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெஸ் ஹெத் 33 ரன்களையும், கேப்டன் கேட் கிராஸ் 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணியானது 34.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியானது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் கேட் கிராஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை