ENG vs IND, 5th Test: பும்ராவை விமர்சித்த கெவின் பீட்டர்சன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திடீரென பின் தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் பந்துவீச்சில் சொதப்பிவிட்டது.
இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் லீஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ என வீரர்கள் அரைசதங்களை விளாசியதால் 4ஆம் நாள் ஆட்டத்தின் முடிவு வரை இங்கிலாந்து அணி 259 - 3 என வலுவான நிலையில் உள்ளது. ஓவருக்கு 4.45 ரன்களை கசியவிட்டு இந்திய அணி தோல்விக்கு மிக அருகில் சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவின் சொதப்பலுக்கு பும்ரா தான் காரணம் என முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதில், “பும்ராவின் வியூகங்கள் முற்றிலும் மோசமாக இருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளுக்கு அங்கு பலனே இல்லை. ஆனால் அதையே வீசிவைத்ததால், பேட்ஸ்மேன்களால் சுலபமாக கணிக்க முடியும்படி செய்துவிட்டார்.
ரிவர்ஸ் ஸ்விங் பந்து 140+ கிமீ வேகத்தில் வந்தால், நான் ஸ்ட்ரைக்கரின் திசையில் சுலபமாக விளாசலாம். அதனை தான் நேற்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செய்தனர். இங்கு தான் முதல் பிரச்சினையே இருந்தது. அடுத்ததாக ஃபீல்ட் செட்டிலும் சுத்த முட்டாள் தனமான ஒரு முடிவை பும்ரா எடுத்திருந்தார்.
அதாவது அதிரடியாக ஆடிய போதும், தொடர்ச்சியாக லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை நிற்கவைத்திருந்தார். அது பெரிய முட்டாள்தனம். கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாகியிருக்கும். தற்போது ரிவர்ஸ் ஸ்விங் வீசி, முடிந்தால் தலைக்கு மேல் தூக்கி அடி என்பது போன்று செய்திருந்தால், ஆவேசத்தில் விக்கெட் கிடைத்திருக்கலாம். ஆனால் அதை பும்ரா செய்யவில்லை” என விமர்சித்துள்ளார்.