பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்திய அணி, விராட் கோலிக்கு குவியும் வாழ்த்துகள்!

Updated: Mon, Feb 24 2025 09:02 IST
Image Source: Google

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அந்த அணியில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 ரன்னிலும், ஷுப்மன் கில் 46 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அதன்பின் 56 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரியில் அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 7 பவுண்டரிகளுடன் 100 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் விராட் கோலிக்கும் இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதில் சிலவற்றை பார்ப்போம்...

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பதிவில், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிக்கு ஒரு சரியான முடிவு. இது ஒரு உண்மையான நாக் அவுட்! விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் அற்புதமாக பேட்டிங் செய்ததுடன், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் அற்புதமாக செயல்பட்டனர். வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

அதேபோல் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது பதிவில், “கடினமான ஆடுகளத்தில் விராட் கோலி மீண்டும் அதைச் செய்கிறார்.. பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்வதை அவர் எப்போது விரும்புகிறார்.. இந்த விளையாட்டின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த தூதர்” என்று பாராட்டியுள்ளார். ஹர்பஜன் சிங் தனது பதிவில், “இன்று விராட் கோலி சதமடிபபர் என்றும், இந்தியா வெற்றிபெறும் என்பதும் கணிக்கப்பட்ட ஒன்று தான். இந்துஸ்தான் ஜிந்தாபாத்” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், “இதுஒரு அற்புதமான செயல்திறன்! இந்திய அணி சிறப்பாக விளையாடியது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் நீங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் எதிர்கால போட்டிகளுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தனது பதிவில், பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்திறனை வெளிப்படுத்தியது. மேலும் விராட் கோலியின் அற்புதமான இன்னிங்ஸிற்காகவும், ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை எட்டியதற்காகவும் என்னுடையா பராட்டுகள். வரவிருக்கும் போட்டிகளுக்கும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் விராட் கோலிக்கும், இந்திய அணிக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியானது இத்தொடரில் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கோள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை