ஐபிஎல் 2025: மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல்?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்திய அணி நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடவுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேஎல் ராகுலை விடுவித்தது.பின்னர் வீரர்கள் ஏலத்தின் போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.14 கோடிக்கு கேஎல் ராகுல் ஒப்பந்தம் செய்யபட்டார். இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தன.
ஏனெனில் அவர் இதற்கு முன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் தான் ஒரு சாதாரண வீரராக மட்டுமே அணியில் விளையாடவுள்ளதாக கேஎல் ராகுல் தெரிவித்ததை அடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேலும், துணைக்கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேஎல் ரகுல் தொடக்க வீரர் இடத்தையும் விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடக்க வீரராக கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதன்படி அவர் தொடக்க வீரராக களமிறங்கி 4 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் உட்பட 4183 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் அவர் ஐபிஎல் தொடரின் மிடில் ஆர்டர் வீரராக 24 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியுள்ளதுடன், அதில் அவரின் ஃபார்மும் அவ்வளவு சிறப்பாக இல்லை.
இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மிடில் ஆர்டரில், குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான பேட்டராக இருந்து வருகிறார். சமீபத்திய ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அவர் ஆறாவது இடத்தில் களமிறங்கி அணியின் வெற்றியில் பங்கு வகித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்போது மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவதாக கணிக்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் கேஎல் ராகுல் பொதுவாக ஐபிஎல்லில் புதிய பந்தில் பேட்டிங் செய்வதற்குப் பழகிவிட்டார், அங்கு பீல்டிங் கட்டுப்பாடுகள் உள்ளன, மேலும் அவர் விரைவாக ரன்கள் எடுக்க முடியும். ஆனால் மிடில் ஆர்டரில் நிலைமை மாறுகிறது. பந்து பழையதாகும்போது, அதிக சுழல் காணப்படுகிறது, மேலும் ஸ்ட்ரைக்கை சுழற்றுவது மிகவும் முக்கியமானதாகிறது. அதனால் கே எல் ராகுல் போன்ற வீரர் மிடில் ஆர்டரில் விளையாட வைப்பது சரியானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.