ராகுல், இஷான் பிளேயிங் லெவனில் இருப்பார்களா? - ரோஹித் சர்மா பதில்!
சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்புக்கு காணப்படுகிறது. முன்னதாக இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது.
இந்நிலையில் 2023 உலகக்கோப்பை அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மதியம் 1.30 மணிக்கு நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.ரோகித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுலுடன், இஷான் கிஷனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் ஒரே போட்டியில் களமிறங்குவார்களா என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “ஆமாம். வாய்ப்பு இருக்கிறது. இஷான் கிஷன் கடைசிப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் முன்பு பலவிதமான காரணிகள் உள்ளன. அதயெல்லாம் பார்த்துதான் தேர்வு செய்வோம். அந்த நேரத்தில் அனைவரும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் முடிவு எடுப்போம்” எனக் கூறியுள்ளார்.
கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். ஆசியக் கோப்பையில் 2 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாட உள்ளார். நம்பர்.5இல் ராகுலின் சராசரி சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷனும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்துள்ளார். ஆனால் யார் எந்த வரிசையில் விளையாடுவார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. ராகுல் 54 போட்டிகளில் 1986 ரன்களும் சராசரி 45.13ஐயும் கொண்டுள்ளார். இஷான் கிஷன் 19 போட்டிகளில் 776 ரன்களும் சராசரி 48.50ஐயும் கொண்டுள்ளார். இருவரும் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.