பேட்டிங் பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்; உடற்தகுதியில் பின்னடைவு?
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி நிற்கும் வீரர்கள் கம்பேக் கொடுக்க வேண்டுமெனில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
ஏற்கனவே பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ரிஷப் பந்த் என பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வேளையில் ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறுவதற்காக பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது பயிற்சியை துவங்கி விட்டனர். ஆனால் கே.எல் ராகுல் தற்போது பேட்டிங் பயிற்சியை துவங்கி விட்டாலும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தொடைப்பகுதியில் காயமடைந்த அவர் எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறியிருந்தார். அதனைத்தொடர்ந்து லண்டன் சென்று அறுவை சிகிச்சை முடித்துக் கொண்ட கேஎல் ராகுல் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இருந்தாலும் அவர் இன்னும் முழு பிட்னஸ் அடையவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆசிய கோப்பை தொடருக்கான அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கட்டாயம் கேஎல் ராகுலால் அந்த தொடருக்குள் அணிக்கு திரும்ப முடியாது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடருக்கும் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரே விக்கெட் கீப்பர் இடங்களுக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஒருவேளை இந்த ஆசிய கோப்பை தொடரை கே.எல் ராகுல் தவறவிடும் பட்சத்தில் அவர் உலக கோப்பை தொடருக்கான அணியிலும் வாய்ப்பினை பெறுவது கடினம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகமான கேஎல் ராகுல் இதுவரை 47 டெஸ்ட் போட்டிகள், 54 ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.