இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுலிற்கு ஓய்வு; சஞ்சு, ரிஷப் இடம்பெற வாய்ப்பு!
இம்மாத இறுதியில், இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எந்தெந்த வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறனர்.
அந்தவகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காத்திருந்த முகமது ஷமி இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக காயத்தினால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த ஷமி தற்சமயம் காயத்தில் இருந்து குணமடைந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் தற்சமயம் உடற்தகுதியுடன் இருக்கும் முகமது ஷமி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கவுள்ளது, இந்திய பந்துவீச்சு யூனிட்டிற்கு கூடுதல் பலத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரிடையே கடுமையான போட்டி இருப்பதால் இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேஎல் ராகுலுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், ராகுலுக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், இருப்பினும் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக அவர் இருப்பார் என்றும் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இங்கிலாந்து தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அதில் சிறப்பாக செயல்படுபவரை சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கூடுதல் விக்கெட் கீப்பராக இந்திய அணி தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது. சமீப காலங்களில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பெட்டராக செயல்பட்டு வரும் கேஎல் ரகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் மிடில் ஆர்டரில் அணிக்கு நம்பிகையை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிய பிறகு இந்தியா திரும்பிய ராகுல், விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுலின் செயல்திறன் கலவையாக இருந்தது. அவர் 5 போட்டிகளில் 30.66 என்ற சராசரியில் 276 ரன்கள் எடுத்தார். அதில் அவர் இரண்டு அரை சதங்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.