இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதிற்கு நான் தகுதியற்றவன் - கேஎல் ராகுல்!

Updated: Mon, Oct 03 2022 10:59 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி கௌகாதியில் துவங்கி நடைபெற்றது. 

இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களைக் குவித்தது.  இலக்கை துரத்திக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா 0, ரூசோவ் 0 ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில், தொடர்ந்து ஐடன் மார்க்கரம் 33 அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார். 

இதனைத் தொடர்ந்து டி காக், மில்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து டெத் ஓவர்களில் 11,26,20 என மொத்தம் 18 பந்துகளில் 57 ரன்களை குவித்து மிரள வைத்தனர். 17ஆவது ஓவரில் தீபக் சஹார் 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்ததால்தான், இந்தியா தப்பித்தது. இறுதியில் தென்னாப்பிரக்க அணி 20 ஓவர்களில் 221/3 ரன்களை குவித்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. டி காக் 69, மில்லர் 106 இருவரும் கடைசிவரை களத்தில் இருந்தனர்.

இப்போட்டியில் 28 பந்துகளில் 57 ரன்களை குவித்த கேஎல்ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு பேசிய கே.எல்.ராகுல், ‘‘பிட்ச் துவக்கத்தில் வேகத்திற்கு சாதகமாகத்தான் இருந்தது. மூன்று ஓவர்கள் முடிந்தப் பிறகு பிட்ச் பேட்டர்களுக்கு ஒத்துழைப்பு தர ஆரம்பித்தது. அப்போது ரோஹித்தும், நானும் இதுகுறித்து பேசினோம். 180-185 ரன்களை அசால்ட்டாக அடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். அதன்பிறகு இவரும் அதிரடியாக விளையாடியபோது, நிச்சயம் 200+ ரன்களை அடிப்போம் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆட்டநாயகன் விருதிற்கு நான் தகுதியில்லை என நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவிற்குத்தான் இதனை கொடுத்திருக்க வேண்டும். அவர்தான் கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடி அசத்தினார். அவரது ஷாட்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினேஷ் கார்த்திக்கிற்கு எப்போதுமே குறைவான பந்துகள் மட்டுமே கிடைக்கிறது. அந்த பந்துகளில் அதிக ரன்களை அசால்ட்டாக குவிக்கிறார். இன்றைய போட்டியில் விளையாடியதைப்போல இனி வரும் போட்டிகளிலும் அதிரடி காட்ட விரும்புகிறேன்’’ எனக் கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை