கேல் ராகுலால் வாய்ப்பை இழக்கும் சர்ஃப்ராஸ் கான்?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் கேஎல் ராகுல் மற்றும் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கான் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இதனால் இவர்களில் எந்த வீரர் நம்பர் 5ஆம் இடத்தில் களமிறங்க வாய்ப்பை பெறுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில் சர்ஃப்ராஸ் கான் விளையாடும் லெவனில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே தெரிகிறது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், “அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளியில் இருந்து வருபவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் ராகுல் தனது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை.
இதற்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாகவே அவர் அணியில் இருந்து விலகி இருந்தார். அதுமட்டுமின்று அவர் தென் ஆப்பிரிக்காவில் சதம் விளாசியதுடன், காயத்திற்கு முன் ஹைதராபாத்தில் 86 ரன்களையும் சேர்த்து சிறப்பான ஃபார்மில் இருந்துள்ளார். அவர் ஃபார்மிற்கு திரும்பியதன் மூலம், ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் சவால்களுக்கு நிர்வாகம் அவரை முக்கியமான வீரர்களில் ஒருவராக கருதுகிறது.
அதேசமயம் சர்ஃபராஸ் கானும் அணிக்கு வலுவான போட்டியாளர். காயம் அல்லது ஏதேனும் சூழ்நிலை ஏற்பட்டால், சர்ஃபராஸ் இடம்பிடிக்கும் முதல் வீரராக இருப்பார். ஏனெனில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அதனால் அணியில் ஏதெனும் பேட்டர்கள் காயமடையும் பட்சத்தில் அவருக்கான மாற்ற வீரர்கள் தேர்வில் சர்ஃப்ராஸ் கான் தான் முதலிடத்தில் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த சர்ஃப்ராஸ் கான், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தொடரில் கேஎல் ராகுல் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவுக்காக இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கான் 50 சராசரியில் 200 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், தற்போது கேஎல் ராகுல் காயத்திலிருந்து மீண்டுள்ளதால் சர்ஃப்ராஸ் கானின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.