ஐபிஎல் 2022: மீண்டும் சதம் விளாசிய ராகுல்; மும்பைக்கு 169 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 37ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் கேப்டன் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையிலிருந்த ராகுல் அரைசதத்தைக் கடந்தார்.
பின்னர் 22 ரன்கள் எடுத்திருந்த மனீஷ் பாண்டே, பொல்லார்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்னால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலினுக்கு நடையைக் கட்டினர்.
ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் நடப்பு சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 103 ரன்களைச் சேர்த்தார்.