WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி! 

Updated: Mon, May 22 2023 21:34 IST
Image Source: Google

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. புஜாரா மட்டுமே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனமாக உள்ளார்.

மீதமுள்ள வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பிஸியாக இருக்கிறார்கள். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் சில போட்டிகளில் ஓய்வெடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரின் அழுத்தம் யாருக்கும் ஒரு போட்டியில் கூட ஓய்வு வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறும் ஐபிஎல் அணிகளில் உள்ள வீரர்களில் இந்திய அணிக்கு தேர்வானவர்களை முன்னதாகவே இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் 3 பிரிவுகளாக இங்கிலாந்துக்கு செல்லவுள்ளனர். அதன்படி முதல் கட்டமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர்.

அங்கு செல்லும் இந்திய வீரர்களில் பயிற்சியில் பங்கேற்பதோடு, சில பயிற்சி போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து குவாலிஃபயர் சுற்றின் 2 போட்டிகள் முடிவடைந்த பின், அடுத்தக்கட்டமாக சில வீரர்கள் பயணிக்க உள்ளனர். ஐபிஎல் தொடர் முடிவடைவதற்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கவனம் செலுத்துவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதன்படி நாளை விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள். அவர்களுடன் அனிகேத் சௌத்ரி, ஆகாஷ் தீப் மற்றும் யர்ரா பிருத்விராஜ் ஆகியோரும் பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை