ஸ்லோ ஓவர் ரேட்: தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐசிசி அபராதம்!
ENG vs SA, 3rd ODI: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐசிசி விதிகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் 110 ரன்களையும், ஜோ ரூட் 100 ரன்களையும் விளாசினர். மேற்கொண்டு ஜேமி ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 62 ரன்களைச் சேர்க்க அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 414 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ், கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் கார்பின் போஷ் 20 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20.5 ஓவரில் 72 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த அனைவருக்கும் தலா 5 சதவீதம் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
Also Read: LIVE Cricket Score