கோலி விவகாரத்தில் மூத்த அதிகாரிகள் விளாக்கம் அளிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!

Updated: Thu, Dec 16 2021 11:18 IST
Image Source: Google

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கியது முதல் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கங்குலி குறித்து விராட் கூறிய கருத்துக்கள் மேலும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

கேப்டன்சி மாற்றப்பட்ட விவகாரத்தில் நேற்றைய தினம் முதல் முறையாக வாய்த்திறந்தார் விராட் கோலி. அதில் இந்திய டெஸ்ட் அணி தேர்வு செய்வதற்கு 90 நிமிடங்கள் முன்னர் தான் தன்னிடம் கேப்டன்சி மாற்றம் குறித்து கூறினார்கள் என பகிரங்கமாக கூறினார். இதே போல டி20 கேப்டன் பதவியில் இருந்து தான் விலகிய போது, யாரும் தன்னிடம் பதவி விலகாதீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை எனவும் உண்மையை உடைத்தார்.

ஆனால் முன்னதாக பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியிடம் டி20 கேப்டன் பதவியில் நீங்களே செயல்படுங்கள் வேண்டுகோள் விடுத்ததாக விளக்கம் கொடுத்துள்ளார். இதனால் கேப்டன்சியில் விவகாரத்தில் யார் சொல்வது உண்மை என்று புரியாமல் இந்திய ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் உண்மையை தெரிந்துக்கொள்ளவும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தலையிட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “விராட் கோலியின் கருத்துக்கள் பிசிசிஐ-யை எந்த விதத்திலும் சர்ச்சைக்குள் கொண்டு வரவில்லை. எனினும் கங்குலி எனும் தனி நபர் விராட் கோலியிடம் எப்போது, பதவி விலக வேண்டாம் எனத்தெரிவித்தார் என்பது தெரியவேண்டும். பிசிசிஐ தலைவராக அதனை விளக்க வேண்டியது கங்குலியின் கடமை.

எந்தவொரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசியிருந்தால், இவ்வளவு பெரிய சர்ச்சைகள் உருவாகியிருக்காது. எனவே மூத்த அதிகாரிகள் வெளிப்படையான விளக்கத்தை கொடுத்தால் தான் சில விஷயங்களுக்கு சரி வரும். அப்படி இல்லையென்றால் ஒரு அறிக்கை வெளியிட்டாவது இந்த பிரச்சினைக்கு முடிவு கொண்டு வரவேண்டும்” எனக்கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை