ENG vs IND: இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎஸ் பரத்!

Updated: Sat, Jun 25 2022 16:43 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி முன்னதாக கடந்தாண்டு கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதில் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஜோடி மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் கடந்த ஆண்டு விளையாடினர்.

இம்முறை கேஎல் ராகுல் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் மாற்று வீரராக களமிறக்கப்படலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து லெஸ்டர்சைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித், சுப்மான் கில் 20 ரன்களை தாண்டி ஆட்டமிழந்தனர்.

ஆனால், அந்த இன்னிங்சில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். 111 பந்துகளை எதிர்கொண்ட பரத், 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும. இதே போன்று ரிஷப் பந்தும் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்தார்.

மற்ற இந்திய அணி வீரர்கள் சொதப்பினர். இதனையடுத்து விக்கெட் கீப்பராக ஏற்கனவே ரிஷப் பந்த், உள்ளதால் கேஎஸ் பரத்துக்கு எங்கே வாய்ப்பு கொடுப்பது என தெரியவில்லை. இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தின் 2ஆவது இன்னிங்சில் கேஎஸ் பரத்தை ரோஹித் சர்மா தனது இடத்தை விட்டு கொடுத்து ஓப்பனிங் இறங்க வாய்ப்பு கொடுத்தார்.

இதனை பயன்படுத்தி கொண்ட கேஎஸ் பரத் , இரண்டாவது இன்னிங்சிலும் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் சுப்மான் கில் அதிரடியாக விளையாட முற்பட்டு 34 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். ஆனால், கேஎஸ் பரத், டெஸ்ட் இன்னிங்ஸ்க்கு ஏற்றவாறு பந்தை பழசாக்கும் முயற்சியில் இறங்கினார்.

இதில் 98 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த கேஎஸ் பரத் 7 பவுண்டரிகளை விளாசினார். இதனால் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் கேஎஸ் பரத் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை