ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் முதலிடத்திலும், இந்திய வீரர் ஷுப்மன் கில் இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இலங்கை தொடரில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தையும், அதேசமயம் இத்தொடரில் பெரிதளவில் சோபிக்க தவறிய விராட் கோலி ஒரு இடம் பின் தங்கி நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து வேறெந்த இந்திய வீரரும் டாப் 10 இடங்களில் இல்லை.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் எந்த மாற்றமும் இன்றி கேசவ் மகாராஜ் முதலிடத்திலும், ஜோஷ் ஹசில்வுட் இரண்டாம் இடத்திலும், ஆடம் ஸாம்பா மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். இலங்கை தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 5 இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் முகமது சிராஜ் உள்ளார்.
அதேசமயம் இத்தொடரில் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா மூன்று இடங்கள் பின் தங்கி 8ஆம் இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் இலங்கை வீரர் துனித் வெல்லாலகே 5 இடங்கள் முன்னேறி 76ஆம் இடத்தையும், இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் 37 இடங்கள் முன்னேறி 96ஆவது இடத்தையும், வாஷிங்டன் சுந்தர் 45 இடங்கள் முன்னேறி 97ஆவது இடத்தையும் பிடித்தும் அசத்தியுள்ளனர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் டாப் 10-ல் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய துனித் வெல்லாலகே 65 இடங்கள் முன்னேறி 67ஆவது இடத்தையும், சரித் அசலங்கா 32 இடங்கள் முன்னேறி 70ஆவது இடத்தையும், இந்திய வீரர் அக்ஸர் படேல் 40 இடங்கள் முன்னேறி 71ஆவது இடத்தியும் பிடித்து அசத்தியுள்ளனர்.