இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 7) நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பான உலக சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லி 32 பந்துகளில் 24 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 19 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தார்.
27,000 சர்வதேச ரன்கள்
இந்நிலையில் நாளை நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 78 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை அதிவேகமாக கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விரட் கோலி படைப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது வரை மூன்று வீரர்கள் மட்டுமே 27000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். அதன்படி சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மட்டுமே இதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. .
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14,000 ரன்கள்
அதேசமயம் நாளைய போட்டியில் விராட் கோலி 114 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரை 294 போட்டிகளில் விளையாடி 281 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 13,886 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் 350 இன்னிங்ஸ்களில் 14,000 ஒருநாள் ரன்களை எட்டியதே சாதனையாக உள்ள நிலையில், அதனை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரே வடிவத்தில் அதிக சதங்கள்
மேற்கொண்டு இந்தப் போட்டியில் விராட் கோலி சதமடிக்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு வடிவத்திலும் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பும் உள்ளது. அதன்படி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களை அடித்துள்ளார். அதேசமயம் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.