எல்பிஎல் 2022: தம்புலா ஆராவை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் வெற்றி!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் டி20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா - ஜாஃபனா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற தம்புலா ஆரா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது.
அதன்பின் 73 ரன்கள் சேர்த்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டமிழக்க, 54 ரன்களோடு ஃபெர்னாண்டோவும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 10 ரன்களிலும், சமரவிக்ரமா 38 ரன்களோடும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இறுதியில் அதிரடி காட்டிய ஷோயப் மாலிக் 15 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைக் குவித்தது. தம்புலா அணி தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புலா ஆரா அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜோர்டன் காஸ் 5 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க வீரரான ஷெவன் டேனியல் 29 ரன்களிலும், பனுகா ராஜபக்ஷா 38 ரன்களில், கேப்டன் தசுன் ஷனகா 44 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தம்புலா ஆரா அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஜாஃப்னா கிங்ஸ் தரப்பில் பினுரா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தம்புலா ஆரா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.